ஜெலி, பிப் 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்ந்து மீறுவோர் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெளிவுபடுத்தினார்.
அபராதத் தொகையை 1,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளியாக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவு எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் அனைவரையும் உட்படுத்தாது என்றும் அவர் சொன்னார்.
இந்த அபராதத் தொகை அதிகரிப்பினை சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக சாடியிருந்ததையும், தொடர்ந்து பக்காத்தான் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.
பத்தாயிரம் வெள்ளி அபராதத் தொகை குறித்து பொது மக்கள் மத்தியில் அச்சம் நிழவி வந்தது. இந்த ஐயப்பாடுகளை போக்கும் வண்ணமும், தவறான புரிதல் எற்படுவதை தவிற்க, முகக் கவசம் அணியாதது உள்பட அனைத்து குற்றங்களுக்கும் இந்த அதிகப்பட்ச அபராத் தொகை விதிக்கப்படாது என்றார் தேசிய போலீஸ் படைத் தலைவர்.
குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே இந்த அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறுகளைப் புரிவோர் மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பது உள்ளிட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறுவதன் மூலம் நோய்த் தொற்றுப் பரவலுக்கு காரணமாக விளங்குவோர் ஆகியோர் மட்டுமே இத்தகைய கடுமையான தண்டனையை எதிர்நோக்குவர் என்றும் அவர் தெரிவித்தார்
ஜெலி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் புதிய கட்டிட நிர்மாணிப்பைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி அமலுக்கு வருவதாக கடந்த 25ஆம் தேதி அரசாங்கம் அறிவித்தது.
எஸ்.ஒ.பி. தொடர்பான குற்றங்களைப் புரியும் தனி நபர்களுக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதமும் நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கும் வகையில் இச்சட்டம் அமல் செய்யப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 150 அதிகாரத்தின் (2பி) உட்பிரிவின் கீழ் இந்த சட்ட அமலாக்கத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டத் துறை அலுவலகம் கூறியது.


