ஷா ஆலம், பிப் 27- போதைப் பொருளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை ‘ஸ்பீக்‘ எனப்படும் சமூக பிரசார பணிக்குழு மாநிலம் முழுவதும் உள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ளதாக போதைப் பொருள் தடுப்புச் சங்கத்தின் (பெமாடாம்) கௌரவச் செயலாளர் டாயிங் முகமது ராடுவான் பாச்சோக் கூறினார்.
இந்த பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக அந்த அரசு சாரா அமைப்புக்கு சிலாங்கூர் மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை இவ்வாண்டில் வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உண்மையில் நேர்மைறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை உறுதி செய்வதற்காக தங்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பணிகளை பெமாடாம் மற்றும் ஸ்பீக் ஆகிய அமைப்புகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உறுதியான நிலைப்பாடும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உணர்வும் நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான போதைப் பொருள் எதிர்ப்பு மாதத்தை நிறைவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்நிகழ்வில் பேசிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஸ்பீக் அமைப்பை உருவாக்கியதன் வழி மாநிலத்தில் போதைப் பொருள் நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டை அரசு புலப்படுத்தியுள்ளதாக சொன்னார்.


