NATIONAL

எஸ்.ஓ.பி. விதிமுறையை மீறினால் வெ. 10,000 அபராதம்- மார்ச் 11 முதல் சட்டம் அமல்

26 பிப்ரவரி 2021, 4:02 AM
எஸ்.ஓ.பி. விதிமுறையை மீறினால் வெ. 10,000 அபராதம்- மார்ச் 11 முதல் சட்டம் அமல்

கோலாலம்பூர், பிப் 26- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி  இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

2021ஆம் ஆண்டு (திருத்தம் செய்யப்பட்ட) தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அவசரகாலச் சட்டத்தில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க பதிவேட்டில் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள இந்த திருத்தம் தொடர்பான விபரங்கள் அரசாங்க சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அதிகாரத்துவ அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.ஒ.பி. தொடர்பான குற்றங்களைப் புரியும் நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு 50,000 வெள்ளி வரை  அபராதம் விதிக்க இச்சட்டத்திருத்தம் வகை செய்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 150 அதிகாரத்தின் (2பி) உட்பிரிவின் கீழ் இந்த சட்ட அமலாக்கத்திற்கு மாட்சிமை தங்கிய  பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஒப்புதல்  அளித்துள்ளதாக அந்த அரசாங்க பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தை 2021 ஆம் ஆண்டு (திருத்தம் செய்யப்பட்ட) (தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) அவசர காலச் சட்டம் என்ற பெயரில் உடனடியாக அமல்  செய்வதற்கு மேற்கொள்ளப்படும் உடனடி நடவடிக்கைள் குறித்து மாமன்னர் மனநிறைவு கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.