ECONOMY

நாடி, கோ டிஜிட்டல் வாயிலாக சிறு வணிகர்களுக்கு வர்த்தக கடனுதவி- மந்திரி புசார் அறிவிப்பு

10 பிப்ரவரி 2021, 7:58 AM
நாடி, கோ டிஜிட்டல் வாயிலாக சிறு வணிகர்களுக்கு வர்த்தக கடனுதவி- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், பிப் 10- சிறு வியாபாரிகளுக்கு குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நாடி (நியாகா டாருள் ஏசான்) மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய திட்டங்களை சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக வியாபாரம் தொடங்குவோருக்கு உதவும் வகையில்  வெ 1.000 முதல்  வெ. 5,000 வரையிலான கடனுதவி நாடி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தங்கள் வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்க விரும்புவோருக்கு உதவுவதை கோ டிஜிட்டல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

வணிகர்கள் தங்களை இலக்கவியல் தளத்திற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக நான்கு வழிகளை கொண்ட கோ டிஜிட்டல் அறிமுகப்படுத்துகிறது. செயல் முறை உதவி, மின்னியல் உபகரண உதவி, சந்தை வாய்ப்பு மற்றும் தேர்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக உரிய பயிற்சி  ஆகியவையே அந்த நான்கு வழிகளாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முகநூல் வாயிலாக நாடி மற்றும் கோ டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்த போது மந்திரி புசார் இதனைத் தெரிவித்தார்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கிலான திட்டங்களை அமல் செய்யும் முயற்சியில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரும் என்றும் அவர் சொன்னார்.

ஒரு கோடி வெள்ளியை தொடக்க நிதியாக கொண்டு நாடி திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் அறிவித்திருந்தார்.

வணிகர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் வெள்ளி கடனுதவியாக வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் மூவாயிரம் வணிகர்களை இலக்காக கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறிய அவர், ஊராட்சி மன்றங்களிடமிருந்து தற்காலிக லைசென்ஸ் பெற்று வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

வர்த்தக நடவடிக்கைகளை இலக்கவியல்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கேற்ப கோ டிஜிட்டல் திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அமிருடின் சொன்னார். மூவாயிரம் பேரை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் வணிகர்கள் டேப்லெட் எனப்படும் வரைப்பட்டிகை மற்றும் திறன்பேசி போன்ற மின்னியல் உபகரணங்களை வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.