NATIONAL

மலேசிய ஹாக்கி லீக் போட்டியை நடத்த ஹாக்கி சம்மேளனம் ஆர்வம்

7 பிப்ரவரி 2021, 11:47 AM
மலேசிய ஹாக்கி லீக் போட்டியை நடத்த ஹாக்கி சம்மேளனம் ஆர்வம்

கோலாலம்பூர் பிப் 7- பொது முடக்க காலத்தில் அரசாங்கம் விளையாட்டுத் துறைக்கு விதிமுறை தளர்வுகளை அறிவித்தால் 2021ஆம் ஆண்டிற்கான மலேசிய ஹாக்கி டி.என்.பி. லீக் போட்டியை நடத்த மலேசிய ஹாக்கி சம்மேளனம் ஆர்வமுடன் உள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விளையாட்டு  மற்றும் பொழுதுபோக்குத் துறைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் கூறினார்.

இந்த லீக் கிண்ணப் போட்டி தேசிய சீனியர் விளையாட்டுக் குழு, ஆண்கள் சிறப்புக் திட்டக் குழு மற்றும் மகளிர்  குழுக்களுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குவதாக அவர் சொன்னார்.

இந்த போட்டி அனைத்து ஹாக்கி விளையாட்டாளர்களுக்கும் உத்வேகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அனைத்துலக ஹாக்கி போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை விளையாட்டாளர்கள் எதிர் கொள்வதற்கு இந்த லீக் கிண்ணப் போட்டி சரியான களமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மலேசிய டி.என்.பி. லீக் கிண்ண ஹாக்கி போட்டியை நடத்துவதன் வழி பல்வேறு அனுகூலங்கள் மலேசிய ஹாக்கி விளையாட்டுத் துறைக்கு கிடைக்கும். விளையாட்டாளர்கள் பொருளாதார ரீதியில் மீட்சி பெறவும் விளையாட்டு ஏற்பாட்டு ஆதரவாளர்கள் நிதியுதவி செய்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு,  விளையாட்டுத் துறை புதிய உத்வேகம் பெறும் என்றார் அவர்.

கடந்த மாதம் 14ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான அறிவிப்பு காரணமாக வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாத த்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.