ஷா ஆலம், பிப் 6 - சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலாளராக டத்தோ நோர் அஸ்மி டிரோன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் 3ம் அமலுக்கு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்த டத்தோ முகமது அமின் அகமது ஆஹ்யா இன்றுடன் பதவி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து நோர் அஸ்மின் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கச் செயலாளர் பதவி ஏற்றிருக்கும் நோர் அஸ்மிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் முழுமையான பங்களிப்பை வழங்குவார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
நோர் அஸ்மியின் நியமனத்திற்கு சிலாங்கூர் மாநிலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக சிலாங்கூர் மாஜூ திட்டத்தை நனவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பாடுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
அதே சமயம், நான்கு ஆண்டுகால சேவைக்குப் பின்னர் பதவி விலகும் டத்தோ அமினுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற நோர் அஸ்மி, கடந்த 1995ஆம் ஆண்டில் நிர்வாக மற்றும் அரசதந்திர அதிகாரியாக நியமனம் பெற்றார்.
புறநகர் மற்றும் கூட்டரசு மேம்பாட்டுத்துறை அமைச்சு, தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சு மற்றும் பிரதமர் துறை அமைச்சு ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவில் பணியாற்றிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டில் மாநில நிதி அதிகாரியாக நியமனம் பெற்றார்.


