ஷா ஆலம், ஜன 29- தவறிழைக்கும் தங்கள் அதிகாரிகளுக்கு எதிராக அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை எடுப்பதை சிலாங்கூர் அரசு வரவேற்கிறது. அரசு துறைகளில் உயர்நெறி தொடர்ந்து நிலைநாட்டப் படுவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கை துணை புரியும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தனது சகோததரரின் திட்டமிடல் விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஊராட்சி மன்ற இயக்குநர் ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டது குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
மாநில அரசாங்கம் இவ்விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அந்த இயக்குநர் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாகச் சொன்னார்.
காஜாங் நகராண்மைக் கழக திட்டமிடல் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் டத்தோ நிஸாம் சஹாரி (வயது 54) மீது 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 23(1) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவு 24(1) ஆகியவற்றின் கீழ் நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் லஞ்சத் தொகையில் ஐந்து மடங்கு அல்லது பத்தாயிரம் வெள்ளி அல்லது இவற்றில் அதிகப்பட்சத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.


