ஷா ஆலம், ஜன 8- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று தொடங்கி இன்று வரை மேற்கொள்ளப்படும் கோவிட்-19 சோதனையில் சுமார் இரண்டாயிரம் பேரை சோதிக்க கிளினிக் செல்கேர் திட்டமிட்டுள்ளது.
இந்த சோதனையில் பங்கேற்க நேற்று காலை சுமார் 300 பேர் திரண்டதன் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
கோவிட்-19 நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக அவர் சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையை எளிதாக்குவதற்கு ஏதுவாக செலாங்கா செயலி வாயிலாக முன்கூட்டியே பதிந்து கொள்ளும்படி இவ்வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இலவசமாக மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் குடும்பத்துடன் பங்கேற்கும்படி தாமான் ஸ்ரீ மூடா வட்டார மக்களை தாங்கள் கேட்டுக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
சோதனை நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள உதவும் அண்டிஜென் (ஆர்.டி.கே.-ஏஜி) கருவி இச்சோதனை நடவடிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையை கிளினிக் செல்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த 35 சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேளையில் அவர்களுக்கு உதவியாக நடவடிக்கை மற்றும் மலேசிய இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர் என்றார் அவர்.


