EVENT

இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்

7 ஜனவரி 2021, 10:39 AM
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்

புத்ரா ஜெயா, ஜன 7- மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டுடைமை கணக்கெடுப்பு 2020இன் இரண்டாம் கட்டம் இம்மாதம் 20ஆம் தேதி முதல் அடுத்தமாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பின் போது அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று விபரங்களைச் சேகரிப்பர்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள சீரான நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று 2020 கணக்கெடுப்பு ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உசீர் மஹிடின்  கூறினார்.

இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பில் அனைத்து மலேசியர்களும் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொருத்தமான செயல்முறைகள் பின்பற்றப்படும் என்றார் அவர்.

களத்தில் இருக்கும் கணக்கெடுப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில்  கணக்கெடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில் இயங்கலை வாயிலாக கணக்கெடுப்பை மேற்கொள்வதில் பொதுமக்களுக்கு உதவியும் புரிவர் என அவர் தெரிவித்தார்.

கணக்கெடுப்பு பணிக்கான இடங்கள் இன்னும் காலியாக உள்ளதாக கூறிய அவர், இப்பணியில் சேர விரும்புவோர் அருகிலுள்ள மாநில புள்ளிவிபரத் துறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இந்த கணக்கெடுப்பில் யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு இயங்கலை மற்றும் நேரடியாக வீடுகளுக்குச் சென்று தகவல்களை பெறுவது ஆகிய இரு வழி முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

இயங்கலை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட கணக்கெடுப்பில் நாட்டிலுள்ள சுமார் 3 கோடியே 27 லட்சம் மக்கள் தொகையில் 26.1 விழுக்காட்டினர் அதாவது 85 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.