ஷா ஆலம், ஜன 4- கோவிட்- 19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனையில் பங்கு கொள்ளும்படி பொதுமக்களை சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கேட்டுக் கொண்டார்.
இலவசமாக வழங்கப்படும் இந்த சோதனை வாய்ப்பை அனைத்து மக்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பரிசோதனை இயக்கத்தை சிலாங்கூர் அரசாங்கம் தீவிரமாக மேற்கொள்ளும் காரணத்தால் கோவிட்-19 நோய் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுப்பதே நமது நோக்கமாகும் என்றார் அவர்.
தங்கள் பகுதியில் நடத்தப்படும் கோவிட்-19 சோதனையில் பங்கெடுப்பதன் மூலம் நோய்த தடுப்பு முயற்சியில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நாம் உதவ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் நம்மிடையே ஒத்துழைப்பு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. நமது ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்நோயின் சங்கிலைத் தொடர்பை துண்டிக்க முடியும். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் இதனை சாதிக்கலாம் என அவர் கூறினார்.
சமூக கோவிட்-19 சோதனைத் திட்டத்தை சிலாங்கூர் அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.


