ad
SELANGOR

வளங்களை பகிர்ந்தளிக்கும் வழக்கம் தொடரும்- மந்திரி புசாரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

25 டிசம்பர் 2020, 12:43 PM
வளங்களை பகிர்ந்தளிக்கும் வழக்கம் தொடரும்- மந்திரி புசாரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

ஷா ஆலம், டிச 25- சிலாங்கூர் மாநிலத்தின் வளங்களை மாநில மக்களுக்கு குறிப்பாக உதவி தேவைப்படுவோருக்கு வழங்கும் மற்றும் பகிர்ந்தளிக்கும் வழக்கத்தை மாநில அரசு தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சியின் பாதையிலிருந்து எந்தவொரு தனி மனிதரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசாங்க தலைமைத்துவம் உறுதியாக  உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய் தொற்று காரணமாக பொது மக்கள் எதிர்நோக்கி வரும் கடுமையான சிரமங்களை அரசு அறிந்துள்ளது. ஆகவே, பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் வரும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு நலத் திட்டங்களை மாநில அரசு அறிவித்துள்ளது என்றார் அவர்.

இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிகளவிலான வேலை வாய்ப்புகளை தொழில்முனைவோர் ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

வியாபாரத்தை தொடங்க விரும்புவோருக்கு உதவும் வகையில் குறைந்த பட்சம் ஆயிரம் வெள்ளி கடனுதவி வழங்க வகை செய்யும் நாடி எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டமும் அதில் அடங்கும் என்றார் அவர்.

சுமார் 1.75 கோடி வெள்ளி செலவிலான இணைய தரவு திட்டம், 6.2 கோடி வெள்ளி மதிப்பிலான கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையர் திட்டம், 500 வெள்ளியை உதவி நிதியாக வழங்கும் இறப்பு நிதித் திட்டம், 32.5 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டம் ஆகியவை அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பல்வேறு சம்பவங்கள் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வரும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.