கிள்ளான், டிச 4- கைவிடப்ட்ட மற்றும் வளர்ப்பு நாய்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் முறையை மேம்படுத்துவது தொடர்பில் கிள்ளான் நகராண்மைக் கழகம் பொதுமக்களின் கருத்தை கேட்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இப்பணி கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாக நடத்தப்படுவதாக நகராண்மைக்கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜுடின் கூறினார்.
குடியிருப்புப் பகுதிகள், தொழில்பேட்டைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் நாய்களை வளர்ப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் தொடர்பான பிரச்னைகளைக் தீர்ப்பதில் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மிகுந்த பயனுள்ளவையாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நோக்கத்திற்காக விநியோகிக்கப்பட்ட பாரங்களை பொதுமக்கள் பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தங்களுக்கு அனுப்பிவிடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பான கொள்கை நகராண்மைக்கழகத்தின் பிரதான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக கூறிய அவர், எனினும் இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பொதுமக்கள் நியாயமான வகையில் ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்த்தளம் உள்பட எந்த வீட்டிலும் நாய்களை வளர்க்கவோ, பராமரிக்கவோ, பாதுகாக்கவோ கூடாது என்ற நிபந்தனையும் இந்த புதிய கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான தொழில்துறை கட்டிடத்தில் அதிகபட்சம் இரண்டு நாய்களையும் 1,000 சதுர மீட்டருக்கும் அதிகம் உள்ள கட்டிடங்களில் நான்கு நாய்களையும் வளர்க்க இந்த கொள்கை அனுமதிக்கிறது.
வடகிள்ளான் மற்றும் தென்கிள்ளான் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நாய்கள் தொடர்பான 176 தொந்தரவு புகார்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் பெற்றுள்ளது.


