ஷா ஆலம், டிச 4- சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்திய 100 நாளில் அங்கீகாரம் எனும் கொள்கை 2 கோடியே 16 லட்சம் வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க உதவியது.
நில மேம்பாடு தொடர்பான நிர்வாக மற்றும் திட்டமிடல் விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கான கால அவகாசத்தை 270 நாட்களிலிருந்து 100 நாட்களாக குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கை முதலீட்டாளர் நட்புறவை அடிப்படையாக கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார்.
முன்பு முதலீடு தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முதலீட்டாளர்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டப் பின்னர் முதலீடுகளின் மதிப்பு 2 கோயே 16 லட்சம் வெள்ளியாக உயர்ந்தது. இது சிறந்த வளர்ச்சிக்கான அறிகுறியாகும் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்னைக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இத்திட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
முதலீட்டாளர்களுக்கு நட்புறவான இந்த கொள்கையை அனைவரும் வரவேற்கும் அதேவேளையில் மக்களின் சமுக பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நில மேம்பாடு தொடர்பான விண்ணப்பங்களுக்கு 100 நாளில் அங்கீகாரம எனும் கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக சிலாங்கூர் மாநில அரசு ஜனவரி மாதம் 24ஆம் தேதி அறிவித்தது.


