ஷா ஆலம், அக் 13- டிங்கி நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைள் சமூகத்தின் அனைத்து நிலையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்நோக்கியுள்ள போதிலும் டிங்கி காய்ச்சல் பிரச்னை மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ இண்ட்ரா டாக்டர் ஷாஹாரி ஙகாடிமான் கூறினார்.
வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் அதே வேளையில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும என்று பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கு ஏதுவாக வாரத்திற்கு குறைந்த து 10 நிமிடங்களை ஒதுக்க வேண்டும் எனக் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியுடன் முடிவுற்ற 41வது நோய்த் தொற்று வாரத்தில் மாநிலத்தில் 39,798 டிங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 57,980 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொத்தம் 13,868 டிங்கி சம்பவங்களுடன் கோம்பாக் மாவட்டம் முதலிடம் வகிக்கும் வேளையில் அதனைத் தொடர்ந்து 8,391 சம்பவங்களுடன் உலு லங்காட் மாவட்டமும் 6,520 சம்பவங்களுடன் கிள்ளானும் 5,770 சம்பவங்களுடன் கோம்பாக்கும் 2,239 சம்பங்களுடன் சிப்பாங் மாவட்டமும் உள்ளன.


