ஷா ஆலம், அக் 12- இருபது ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய கடல் பெருக்கு வரும் சனிக்கிழமை ஏற்படவிருக்கிறது. இதனால் சிலாங்கூர் மாநிலத்தின் கடல் பகுதிகளான சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கோல லங்காட், கிள்ளான், சிப்பாங் ஆகிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடல் பெருக்கை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 1,000 வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
வரும் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த கடல் பெருக்கு ஏற்படும் என எதிர் பார்க்கப் படுவதாக மாநில தீயணைப்புத் துறையின் நடவடிக்கை பிரிவுக்கான உதவி இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.
கடல் பெருக்கு ஏற்படுவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட பகுதிகளில் வானிலை, திடீர் வெள்ளம் ஏற்படும் இடங்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
அந்த பேரிடர் சமயத்தில் படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கடல் பெருக்கு இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையானதாக இருக்கும் என தேசிய நீரியல் மையம் கணித்துள்ளது. இக்கடல் பெருக்கின் போது அலைகள் 5.7 மீட்டர் முதல் 5.8 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


