ECONOMY

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எதிரொலி வெறிச்சோடியது கிள்ளான் நகர்

10 அக்டோபர் 2020, 1:08 PM
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எதிரொலி  வெறிச்சோடியது கிள்ளான் நகர்

கிள்ளான், அக் 10- சிலாங்கூரில் ஜன நெருக்கடியும் அதிக பரபரப்பும் கொண்ட நகரான கிள்ளான்  அண்மையில் அமல்படுத்தப்பட்ட நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

வழக்கமாக நெரிசலாக காணப்படும் இந்நகரிலுள்ள சாலைகள் தற்போது வாகன போக்குவரத்து குறைந்து அமைதியாக காணப்படுகின்றன.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் இந்நகரிலுள்ள பல சாலைகளில் போலீசார்  சாலைத் தடுப்புகளை அமைத்து  சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகங்கள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு போலீசார்  ரோந்து சென்று எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து வருகின்றனர்.

ஃபூட் பண்டா மற்றும் கிராப் ஃபூட் போன்ற உணவு விநியோக சேவைக்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்டர் செய்துள்ள உணவை எடுத்துச் செல்வதற்காக இந்நிறுவனங்களைச் சேர்ந்த உணவு விநியோகிப்பாளர்கள் புக்கிட் திங்கியிலுள்ள உணவகங்கள் முன் காத்திருப்பதை காண முடிகிறது.

200 வர்த்தக மையங்களைக் கொண்டு செயல்படும் நாட்டின் பெரிய பேரங்காடிகளில் ஒன்றான புக்கிட் திங்கி இயோன் மாலில் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கிள்ளான் சென்ட்ரோ மால், தாமான் செந்தோசா, கிள்ளான் நகரின் மையப்பகுதி ஆகியவை ஆள்நடமாற்றமின்றி காணப்படுகின்றன.

ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத தலங்கள், பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத வியாபார மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கிள்ளான் வட்டாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இப்பகுதியில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை கடந்த 9ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு அமலில் இருக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.