ஷா ஆலம், அக் 6- இரு சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாதிரி மனசோர் மற்றும் கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் ஆகியோரே அவ்விருவராவர்.பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகா நேற்று நடத்திய இரண்டாவது சோதனையில் ஷாதிரிக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தனது இரு பிள்ளைகள் இருவருக்கும் அந்நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாதிரி கூறினார்.
தொடர் சிகிச்சைக்காக நானும் என் பிள்ளைகளும் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருக்கிறோம் என்று தனது முகநூலில் வெளியிடப்பட்ட காணொளியில் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி சபாவிலிருந்து திரும்பியது முதல் தாமும் தன் பிள்ளைகளும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் சொன்னார்.
தனது தொகுதி அலுவலகப் பணியாளர்கள் மூவருக்கும் இந்நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய்யும் தனக்கு கோவிட் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார்.
சபா மாநிலத்திலிருந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் மருத்துவ சோதனை மேற்கொண்டதோடு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் லிம் சொன்னார்.
எனினும், இம்மாதம் 2 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில்
இந்நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.
NATIONAL
இரு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் நோய்த் தொற்று உறுதி
6 அக்டோபர் 2020, 7:32 AM


