கோலாலம்பூர், செப் 23- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அவருக்கு முழு ஆதரவை வழங்க ஜ.செ.க. தயாராக உள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்தின் முடிவுக்கேற்ப ஜனநாயக செயல் கட்சியின் 42 உறுப்பினர்களும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு முழுமையான ஆதரவை வழங்குவர் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
புதிய அரசாங்கம் அமைக்க தமக்கு போதுமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதன் தொடர்பில் ஜ.செ.க. தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் மற்றொரு உறுப்புக் கட்சியான அமானாவும் அன்வார் இப்ராஹிமுக்கு தனது ஆதரவை புலப்படுத்தியிருந்தது.
அமானா கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அன்வாருக்கு உண்டு என அக்கட்சியின் தலைவர் மாட் சாபு கூறியிருந்தார்.


