NATIONAL

அல்-ஜஸிரா செய்தி நிறுவனத்தின் மீது மேலும் ஐந்து புகார்கள்- காவல்துறை

8 ஜூலை 2020, 6:01 AM
அல்-ஜஸிரா செய்தி நிறுவனத்தின் மீது மேலும் ஐந்து புகார்கள்- காவல்துறை

கோலா லம்பூர், ஜூலை 8:

கொவிட்-19 தொற்று நோயை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், சட்டவிரோத குடியேறிகளை மலேசியா கையாண்ட முறை தொடர்பில், அல்-ஜஸிரா அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் ஆவணப்படம் குறித்து மேலும் 5 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, சில நபர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசிர் முஹமட் தெரிவித்திருக்கிறார்.

அல்-ஜஸிராவின் நிருபர் உட்பட இதில் ஈடுபட்டிருந்த அனைத்து தரப்பினரும் மிக விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் பாரபட்சத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஆவணப்படத்தினால், பெரும்பாலானோர் கோபமும் வருத்தமும் அடைந்துள்ளனர். மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று ஹுசிர் எச்சரித்திருக்கின்றார்.

அவதூறு செய்தியை வெளியிட்ட குற்றத்திற்காக, 1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 500-இன் கீழ் விசாரிக்கப்படுவதோடு, தொடர்பு சேவையை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக,1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், செக்‌ஷன் 233-இன் கீழும் இந்த விவகாரம் விசாரிக்கப்படும்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.