புத்ராஜெயா, ஜூன் 30:
பொது பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி கழகங்களில், வரும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் மாணவர்களை சேர்ப்பதற்கான செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி. மற்றும் வழிகாட்டிகளை, உயர்கல்வி அமைச்சு துல்லியமாக ஆராய்ந்து வருகிறது இறுதியாண்டு மாணவர்கள், தேர்வு எழுதவிருப்பவர்கள் மற்றும் பொது பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி கழகங்களில் ஆய்வு முறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை பெறவிருக்கும் மாணவர்கள் அதில் அடங்குவர் என்று அதன் துணை அமைச்சர், டத்தோ மன்சோர் ஒத்மான் தெரிவித்திருக்கிறார்.
உயர்கல்வி அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் பேச்சுகள் நடத்திய பின்னரே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜூலை முதலாம் தேதி தொடங்கி, அக்டோபர் முதலாம் தேதி வரையில், குறிப்பிடப்பட்டிருக்கும் பிரிவின் அடிப்படையில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கப்படுவர். நாளை தொடங்கி, பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி கழகங்களுக்குச் செல்லாமல், இணையத்தின் வழி, பதிவுச் செய்ய வேண்டும் என்றும் மன்சோர் தெரிவித்தார்.


