தாங்காக், ஜூன் 27:
நாட்டில், கொவிட் 19 நோய் இன்னும் பரவி வருவதாலும், அதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்காத நிலையிலும், அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) தொடர்ந்து பின்பற்றுமாறு பொது மக்களுக்கு நினைவுறுத்தப்பட்டிருக்கிறது. நாட்டில், கொவிட் 19 நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தற்போது நிலைமை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்ப உதவுவதாக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார்.
''நாங்கள் மேற்கொண்டிருக்கும் அணுகுமுறை மற்றும் வியூகங்களின்வழி, வழக்க நிலைக்கு திரும்பும் அளவிலான ஒரு சூழ்நிலையை நாம் அடையவிருக்கிறோம். இதற்கு நாம் பெருமைக்கொள்ள வேண்டும்'', என்று அவர் கூறினார்.ஜோகூர், தங்காக்கில், புக்கிட் கம்பிர் பல்நோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது முகிடின் இவ்வாறு தெரிவித்தார்.
தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால், கொவிட் 19 நோய்க்கு தீர்வுகாண முடியாமல் போகும் சாத்தியம் இருப்பதை அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு நினைவுறுத்தி வருவதாக முஹிடின் குறிப்பிட்டார்.
#பெர்னாமா


