செர்டாங், ஜூன் 22:
சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் காலை சந்தை, இரவுச் சந்தை மற்றும் பஸார் ஆகியவை இந்த வாரம் தொடங்கி முழுமையாக செயல்படத் தொடங்கும் என சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். ஆனாலும், பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் நினைவு படுத்தினார். இது வரையில் மாநிலத்தில் 50% சந்தைகள் ஊராட்சி மன்றங்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
" இது வரையில், சந்தை நடைபெற்று வரும் இடங்களில் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கண்டு நான் மனநிறைவு அடைகிறேன். வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அனைவரும் கட்டொழுங்கை கடைபிடிக்க வேண்டும். இந்த எஸ்ஓபிகள் இறுதி வரை தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்," என்று பாலாகோங் தொழில்பேட்டை பகுதியில் ஒரு தொழிற்சாலைக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.


