சுங்கை சீப்பூட், ஜூன் 5:
தங்களின் இல்லத்திற்கு, பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் வருகைப் புரிந்தால், தாங்கள் வாக்குறுதி அளித்தது போல, ஆட்டிறைச்சி பிரியாணி, கோழி வறுவல் மற்றும் சாம்பார் சமைத்து பரிமாறவிருப்பதாக வலையொளியான யூடியுப்பில் பிரபலமான சுகு பவித்ரா தம்பதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பிரியாணி என்பது சுவை மிகுந்த இந்திய உணவுகளில் ஒன்றாகும் என்றும், ஆட்டிறைச்சியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து, வரும் சிறப்பு விருந்தினருக்கு பரிமாறுவதற்கே, தாம் அந்த உணவைத் தேர்ந்தெடுத்ததாக, 28 வயதான எஸ். பவித்ரா கூறியிருக்கிறார்.
இதனிடையே, கோழி வறுவல் என்பது, தென்னிந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான உணவு பண்டமாகும்.
ஆகவே, பிரதமர் தமது வீட்டிற்கு வருகைப் புரிந்தால், தாம் கூறியிருக்கும் இந்த உணவுகளையே தாம் சமைக்கவிருப்பதாக தெரிவித்த பவித்ரா, அதனைச் சமைப்பது மிகவும் எளிதாக இருந்தாலும், அதன் சுவை நிச்சயம் நாவைச் சுண்டி இழுக்கும் என்று தாம் நம்புவதாக, இன்று பெர்னாமா அவரைச் சந்தித்தபோது குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே, இன்று நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தேசிய பொருளாதார மீட்புத் திட்டத்தின் அறிவிப்பின்போது, தங்களின் பெயரையும் பிரதமர் குறிப்பிட்டதை, தாங்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் பவித்ரா கூறினார்.
சாதாரண மக்களான தங்களின் பெயரை பிரதமர் குறிப்பிட்டது தங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதாகவும், அவரின் அந்த நம்பிக்கைக்காக, நிச்சயம் தங்களின் முயற்சியை அதிகரித்து, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, பிரதமர் கூறியதுபோல, தகுந்த மூலதனம் இருந்தால், நிச்சயம் உணவகம் திறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடவிருப்பதாக பவித்ரா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா


