புத்ராஜெயா, ஏப்ரல் 28:
கோவிட்-19 நோய் பரவல் குறைந்த இடங்கள் அல்லது பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொள்ளும் என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்து வருகிற நிலையில் இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சு, காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவை இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அடுத்த வாரத்துக்குள் முழு அறிக்கையை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் உறுதிப் படுத்தினார்.
" பல பச்சை மண்டலங்களை அரசாங்கம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, அரசாங்கம் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தி பொது மக்களுக்கு நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நடவடிக்கையில் சில தளர்வுகளை ஏற்படுத்த ஆலோசனை செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் வீடமைப்பு திட்டத்தை (பிபிஆர்) சுற்றியும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதமாக பொது மக்கள் வெளியே வருவதில்லை. இதன் பிறகு, எந்த ஒரு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால், இப்பகுதியில் வாழும் மக்கள் கிழே செல்ல முடியும். பிள்ளைகளை கூட கொண்டு செல்லலாம். ஆனாலும், பிபிஆர் பகுதியில் மட்டுமே நடமாட முடியும்," என்று இன்று புத்ராஜெயா வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி கூறினார்.


