ஜோகூர் பாரு, ஏப்ரல் 25:
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து இனிமேல் அங்கிருந்து மலேசியா திரும்புபவர்கள் தங்களது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் தொடர்பில் புதிய நடைமுறை வகுக்கப்பட்டு உள்ளதாக ஜோகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைகள் இனி பொருந்தாது. கிருமித்தொற்று இல்லை என பரிசோதனை மூலம் அறிவிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமுறை இனி கிடையாது. நாடு திரும்பும் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அனுமதி அட்டை உள்ளோர் அனைவரும் ஜோகூருக்குள் நுழைந்ததும் உடல்வெப்பப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். காய்ச்சல் கண்டிராதோர், உடல் நலப் பிரச்சினை தொடர்பிலான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உட்படாதோர் என அனை வரும் மருத்துவப் பரிசோதனையை இங்கு மேற்கொள்ள வேண்டும்.
“மருத்துவப் பிரச்சினைகள் கண்டறியப்படுவோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். பிரச்சினை ஏதும் இல்லாதோர் மலேசிய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தும் மையங் களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவர்கள் தவிர, நாட்டுக்குள் நுழையும்போதே காய்ச்சலுடன் வருவோர் நேராக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்,” என்று திரு வித்யானந்தன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


