ஷா ஆலாம், ஏப். 22-
நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் பணி நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறும் மற்றும் அனுமதியின்றி செயல்படும் குத்தகையாளர்கள் கறுப்புப் பட்டியலில் இடம் பெறுவர் என்று அடிப்படை வசதிக்கான முதிர்நிலை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப் எச்சரிக்கை விடுத்தார். அதே வேளையில், இந்தக் குத்தகையாளர்கள் மீது 1988 தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் மற்றும் ஊராட்சி மன்ற சட்டம் பாயும் என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"கட்டுமான தொழிற்துறை மேம்பாட்டு வாரியத்தின் (சிஐடிபி) கீழ் நிர்ணயிக்கப்பட்ட பணி நடைமுறைகளை இவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். கட்டுமான பகுதி, தொழிலாளர்கள் நடமாட்டம் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு சூழல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டியை இந்த பணி நடைமுறைகள் நிர்ணயிக்கின்றன" என்றார் ஃபாடிலா.
" நாம் வழக்கமான சூழலில் வேலை செய்யவில்லை. கோவிட் - 19 தொற்று பரவலை முறியடிக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் உள்ளோம். வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் நிறுவனங்கள் பணி நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்" என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசினார்


