ஷா ஆலம், ஏப்.22-
கடந்த மார்ச் 18ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்போர் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி பதிவு செய்யலாம் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். முதலாவது நடமாட்ட கட்டுப்பாடு ஆணையின் போது இச்சூழ்நிலையில் இருந்து வருவோர் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள கெராக் மலேசியா செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
விவேக கைப்பேசி வசதிகள் இல்லாதவர்கள் அருகில் உள்ள காலவ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.
“இந்த விவகாரம் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இந்த அனுமதி நடவடிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தால் (உத்தரவாதம் இல்லை) அது மே முதல் தேதிக்குப் பின்னரே சாத்தியமாகும்” என்று தற்காப்பு அமைச்சருமான சப்ரி தெரிவித்தார்.
எத்தனை பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்புகின்றனர் என்ற எண்ணிக்கை கிடைத்த பின்னரே அதற்கான நடைமுறைகளை வகுக்க இயலும் என்பதோடு இந்நடவடிக்கையினால் ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் குறித்து சுகாதார அமைச்சின் ஆலோசனையப் பெற வேண்டும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.


