ஷா ஆலம், ஏப்.17-
சமூக இடைவெளி அமலாக்கத்தை உறுதி செய்யும் நடைமுறைகளுடன் மாநிலத்தில் மின் சந்தை அமல்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். “தற்போது உணவங்களும் உணவு அங்காடிகளும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும் போது. அதே நடைமுறையைப் பயன்படுத்தி ஏன் நாம் மின் சந்தையை அமல்படுத்தக் கூடாது? இதையே நாமும் தொடரலாம். விநியோகம் மட்டும் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளி தொடர்ந்து பேணப்படும்” என்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
பல்வேறு இணைய அழைப்பு நிறுவனங்களுடன் மாநில அரசு விவாதித்துள்ளது என்றும் அவை உணவுகளை அனுப்பும் தூரம் வரையறுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். மின் சந்தை வர்த்தகர் பதிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர். திரெங்கானுவும் மின் சந்தையைத் தோற்றுவித்துள்ளது. ஆயினும் சிலாங்கூர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தும் என்று அவர் சொன்னார்.
இதுவரை 1மின் சந்தையைத் தொடங்கியுள்ள 15 சமையல் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் மேலும் பல்வேறு இடங்களில் இது அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுவதாக அமிருடின் கூறினார்.


