ஷா ஆலம், ஏப்.17-
பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 506 ஏழை குடும்பங்களுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) அத்தியாவசிய பொருள் கூடைகள் வழங்கப்பட்டதாக அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் அகமது இஸ்கந்தர் முகமது மொக்தார் கூறினார். கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி செயல்பட்டு வரும்’ பிஜே உணவு வங்கி திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் இந்த உதவிப் பொருட்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்து வருமானம் பெறுவோரின் சுமையை குறைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உதவிப் பொருட்கள் மாதம் 1,500 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள், அதிக குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மற்றும் பிகேபி காலக் கட்டத்தில் வருமானம் இல்லாதோர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
“பிகேபி ஆணை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நகர்புற ஏழைகளின் பிரச்னைகளை எம்பிபிஜே அறிந்துள்ளது. எனவே, வழங்கப்படும் இந்த உதவிப் பொருட்கள் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கு உதவியாக அமையும்” என்றார் அவர்.
“இத்திட்டத்திற்கு பெட்டாலிங் ஜெயா சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன” என்றார் அவர்


