ஷா ஆலம், ஏப்ரல் 14:
நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வரும் 90% பொது மக்களுக்கு ஸ்ரீ செத்தியா சட்ட மன்ற உறுப்பினர் சேவை மையம் உணவு பொருட்களை விநியோகம் செய்துள்ளதாக அதன் சட்ட மன்ற உறுப்பினர் ஹாலிமி அபு பாக்கார் தெரிவித்தார். ஆகவே, அடுத்த கட்ட உதவிகள் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவைப்படும் பெம்பர்ஸ் வழங்க தமது சேவை மையம் களத்தில் இறங்க உள்ளதாக அவர் விவரித்தார்.
" நாம் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக அரிசியை வழங்கும் வேளையில் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்களை விநியோகம் செய்ய உத்தேசித்துள்ளோம். ஆகவே, இது வரை உதவி பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலர் வீட்டில் இரண்டு பேக்கேட் அரிசி இருந்தாலும் இன்னும் எங்களது அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்," என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.


