ஷா ஆலம், ஏப்.14-
கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசா ஆகியவற்றில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையை உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கை நேற்றிரவு புக்கிட் பெருந்தோங், பங்சாபுரி டாஹ்லியவில் உள்ள 15 கட்டடங்களில் தொடங்கி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் தலைவர் சுக்ரி முகமது ஹாமின் கூறினார்.
இக்கட்டடங்களின் படிகள், கதவுப் பிடிகள், வீட்டின் வெளிப்புறப் பகுதி அல்லது பால்கனி மற்றும் 2 மீட்டர் உயர சுவர்கள் ஆகியவற்றின் மீது கிருமி நாசின் தெளிக்கப்பட்டது என்றார் அவர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 மணி நேரத்திற்குப் பின்னரே இக்கட்டடங்களில் உள்ளவர்கள் உள்ளே வர அல்லது வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார். இந்நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று சுக்ரி வலியுறுத்தினார்.


