ஷா ஆலம், ஏப்.14-
சிலாங்கூர் மாநில சேமிப்பு நிதி குழுமத்தின் கல்விக் கடனுதவியின் மாதத் தவணைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து 6 மாதக் கால விலக்களிப்பானது இக்கடனுதவியைப் பெற்ற 5,000 மாணவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
சிலாங்கூரின் 2ஆம் கட்ட பரிவுமிக்க உதவித் திட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலக்களிப்பானது நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் இளைய தலைமுறையினர் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றார் அவர்.
“ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் சேமிக்கப்படும் இந்தத் தொகை சம்பந்தப்பட்ட 5 ஆயிரம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார் அவர். மாநில அரசாங்கத்தின் 7 கல்வி கடனுதவித் திட்டத்தில் மந்திரி பெசார் சிறப்பு உபகாரச் சம்பளம், பெடூலி சிஸ்வா திட்டம், சிலாங்கூர் பிரேய்ன் பேங்க் சிறப்பு திட்டம், சுல்தான் சிலாங்கூர் உபகாரச் சம்பளம் மற்றும் சாகோங் தாசி உபகாரச் சம்பளத் திட்டம் ஆகியவை உள்ளடங்கும்.
கடந்த ஏப்ரல் முதல் தேதி சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம. 272.5 மில்லியன் மதிப்பிலான இரண்டாம் கட்ட பரிவுமிக்க உதவித் திட்டத்தை அறிவித்தது.


