புத்ராஜெயா, ஏப்ரல் 13:
மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி ) போது முடி திருத்தும் கடைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று இன்று தெரிவித்தார்.
“அரசாங்கம் எப்போதும் மக்களின் குரலைக் கேட்கும். இப்போதும் மக்களின் குரலை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில நிபுணர்களின் ஆலோசனையையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கருத்துகளையும் அரசாங்கம் கேட்டுள்ளது”.
“எனவே, நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் வரை, நாடு முழுவதும் உள்ள முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முடிவை பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் எடுத்துள்ளார்”.
“மக்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் இது பதிலளிக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே முடிதிருத்தும் கடை குறித்த பிரச்சினைகள் இனி எதுவும் இருக்காது என்று பிரதமரே முடிவு செய்துள்ளார்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


