புத்ராஜெயா, மார்ச் 25-
நாட்டில் கோவிட்-19 வைரஸினால் மரணமுற்றோரில் பெரும்பாலோர் தாமதமாக சிகிச்சை பெறத் தொடங்கியதால் மரணமடைந்தனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்தத் தொற்று நோய் 5 நிலைகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலோர் 3 ஆவது நிலையில் இருக்கும்போதே சிகிச்சை பெற வருகின்றனர் என்றார்.
முதல் நிலையில், அறிகுறிகள் ஏதும் இருக்காது, இரண்டாவது நிலையில் மிதமான அறிகுறிகள் மட்டுமே தென்படும். மூன்றாவது நிலையில் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் ஆனால் பிராண வாயூ உதவி தேவைப்படாது என்று அவர் விவரித்தார்.
நான்காவது கட்டத்தில் நோயாளிகளுக்கு பிராண வாயூ சிகிச்சை தேவைப்படும் , ஐந்தாவது நிலையில் நோயாளிகளால் நன்றாக சிவாசிக்க இயலாமல் போகும். அப்போது அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
நான்காவது கட்டத்தில் இருக்கும் நோயாளிகளில் பெரும்பாலோரின் உடலாரோக்கியம் விரைவில் மோசமடைந்து ஐந்தாவது கட்டத்தை அடைகின்றது என்று அவர் சொன்னார்.


