புத்ரா ஜெயா,மார்ச்-2
இன்று தமது பதவியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அரசாங்க நிர்வாக நடைமுறையை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக அரசாங்க தலைமைச் செயலாளர் மற்றும் இலாகாக்களின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் கட்சித் தலைவர்களுடன் எந்தவொரு சந்திப்பு அல்லது கூட்டத்தையும் மொகிதீன் இன்று நடத்துவதாகத் திட்டமிடப்படவில்லை என்று பிரதமர் துறை அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.
நாட்டின் எட்டாவது பிரதமராக மொகிதீன் (72) மார்ச் 1 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தாபா பில்லா ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
பிரதமர் என்ற வகையில் மொகிதீன் பிரதமர் அலுவலகம் அமைந்த பெர்டானா புத்ராவில் தமது பணியை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
தமது பணியின் முதல் நாளில் அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது சுக்கி அலி, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் ஆயுதப் படைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அபெஃண்டி புவாங் ஆகியோரிடம் மொகிதீன் சந்திப்பு நடத்தினார்.


