கோலாலம்பூர், பிப்.10-
2020 மலேசிய லீக் விளையாட்டின் தேர்வு சுற்று ஆட்டங்கள் நடைபெறுவதற்கு ஷா ஆலம் ஸ்டேடியம் தயாராக இருப்பதை உறுதிசெய்ய இரண்டாவது முறையாக இவ்வாரம் சோதனையிடப்படும் என்றும் அப்போது கூரைப் பகுதி பழுது மீது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டேடியம் ஷா ஆலம், சிலாங்கூர் காற்பந்து சங்கம் மற்றும் மலேசிய காற்பந்து லீக் போட்டி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுள்ள டாருக் ஏசான் வர்த்தக வசதிகள் நிர்வாகம் (டிஈஎஃப்எம்) இச்சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதன் நிர்வாகி முகமது ஃபாஹ்மி முகமது நூர்டின் கூறினார்.
“மலேசிய காற்பந்து லீக் (எம் எஃப் எல்) மேற்கொண்ட முதலாவது சோதனை நடவடிக்கையின் போது திடல் பகுதியை மேம்படுத்துதல் மற்றும் விளையாட்டாளர்கள் உடை மாற்றும் அறைகள் வசதிகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. கூரைப் பகுதி பழுது மீது கவனம் செலுத்தப்படவில்லை” என்று ஃபாஹ்மி விளக்கினார்.
முன்னதாக மலேசிய காற்பந்து லீக் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான வரையறுக்கப்பட்ட தரத்தை ஷா ஆலம் ஸ்டேடியம் கொண்டிராததால், இந்த பருவத்தின் ஆட்டங்கள் இங்கு நடைபெறாமல் போவதற்கான சாத்தியத்தை சிலாங்கூர் எதிர்நோக்கி வருகிறது.
கூரை பகுதி பழுது அம்சம் உட்பட பல்வேறு தரம் உயர்த்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து தனது தரப்பு சிலாங்கூர் காற்பந்து சங்கத்திடம் மலேசிய காற்பந்து லீக் பரிந்துரைத்ததாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி முகமது ஷாஸ்லி ஷேய்க் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.


