NATIONAL

பிரதமர்: அன்வாரிடம் பதவியை விட்டுக் கொடுப்பேன், ஆனால்....

9 பிப்ரவரி 2020, 12:40 PM
பிரதமர்: அன்வாரிடம் பதவியை விட்டுக் கொடுப்பேன், ஆனால்....
பிரதமர்: அன்வாரிடம் பதவியை விட்டுக் கொடுப்பேன், ஆனால்....

கோலா லம்பூர் , பிப்ரவரி 9:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கம் அமையும் என்ற ஆரூடங்கள் தீ போல் பரவி வரும் வேளையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும் ஆனால், இறுதி முடிவு நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது என மகாதீர் திட்டவட்டமாகக் கூறினார்.

நேற்று மலாயா போஸ்ட் என்ற இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக முன்மொழியப்பட்டாலும், அந்தக் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை அவர் பெற முடியாவிட்டால் அவரால் பிரதமராக முடியாது என்று அவர் விவரித்தார்.

" நான் பிரதமராக இருப்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவால்தான். அப்படியே நான் பதவி விலக மறுத்தாலும் எனக்கு எதிராக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நிராகரித்தால் என்னால் பிரதமராகத் தொடர முடியாது” என்றும் மகாதீர் விளக்கினார்.

தற்போது துன் மகாதீரின் பெர்சத்து, அமானா, சரவாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோ, ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தைத் தோற்றுவிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் வேளையில் மகாதீர் இவ்வாறு கூறியிருக்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தில் உள்ள 222 இடங்களில் பெரும்பான்மையைப் பெற 112 இடங்களே ஒரு பிரதமர் வேட்பாளருக்கு வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், பிகேஆர் கட்சியின் 47 உறுப்பினர்களின் ஆதரவையும் அன்வாரால் பெற முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர் ஜூரைடா  கமாருடின் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாருக்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்து மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளான  பாஸ் மற்றும் அம்னோ ஆகிய இரண்டும் அன்வாரை விட மகாதீர் பிரதமராகத் தொடர்வதையே விரும்புகின்றன என பகிரங்கமாகத் தெரிவித்து மலேசிய அரசியல் அரங்கை மேலும் சூடாக்கி உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.