கோலாலம்பூர், பிப்.6-
நாடெங்கிலும் வரும் சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பொது மக்கள் குறிப்பாக இந்து சமயத்தினர் அண்மையக் காலமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பி. வேத மூர்த்தி தெரிவித்தார்.
ஆயினும், நோய் தடுப்பு நடவடிக்கைகளான தூய்மையைப் பேணுதல், சுவாசக் கவசம் அணிதல் ஆகியவற்றோடு நோய்க்கு இலக்கானால் உடனடியாக மருத்துவரைக் காணுதல் போன்றவற்றை மேற்கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார்.
“கொரோனா வைரஸ் விவகாரத்தை விவேகத்துடன் நிபுணத்துவ முறையில் எதிர்கொண்டு வரும் மலேசியாவை குறிப்பாக சுகாதார அமைச்சர் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி பாராட்டியுள்ளார்” என்றார் அவர்.
எனவே, நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை, மாறாக, கவனத்துடன் இருப்பது சிறப்பாகும் என்று இந்த சமூக உருமாற்றப் பிரிவின் (மித்ரா) பி40 பிரிவினருக்கான ரத்த சுத்திகரிப்பு உதவித் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் கூறினார்.
இச்சிகிச்சைக்காக சமூக நல இலாகா அல்லது சொக்சோ அமைப்புகளில் இருந்து உதவி கிடைக்காத பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தினருக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையைப் பெறத் தகுதி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் இந்த உதவியை வழங்குவதற்கு மித்ராவிற்கு 2.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.


