ஷா ஆலம், பிப்.3-
குப்பைகளை தங்கள் மாடிகளில் இருந்து கீழே வீசும் பழக்கத்தை கென் ரிம்பா அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கைவிட வேண்டும். இதன் வழி அண்டை அயலாருடன் நல்லிணக்கத்தைப் பேணுவதோடு தூய்மையான வீடமைப்பு பகுதியையும் கொண்டிருக்க முடியும் என்று நினைவுறுத்தப்பட்டனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தோற்றத்தை பேணும் பொருட்டு குப்பைகளைக் கண்டபடி வீடும் பழக்கத்தை குடியிருப்பாளர்கள் கைவிட வேண்டும் என்று தங்கள் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கென் ரிம்பா பகுதியின் ருக்குன் தெத்தங்கா தலைவர் ஜைலானி மாருப் கூறினார்.
‘ “குப்பைகள் இங்கே பறப்பதோடு, படிக்கட்டுகளிலும், மின் தூக்கியின் முன்புறம் மற்றும் பின்புறக் கதவு பகுதிகளிலும் குப்பை கூளங்கள் நிறைந்துள்ளன” என்றார் அவர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தங்கள் தரப்பினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளரை கையும் களவுமாகப் பிடிக்க அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
“சம்பந்தப்பட்டவர் குப்பைகளை வீசுவதை ஆதாரத்துடன் கண்டறிந்தால், அவர்கள் குறித்து குடியிருப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்படும்” என்றார் அவர்.
இந்நடவடிக்கைகள் தற்போது நல்ல பயன்களைத் தருவதாக அவர் சொன்னார்.


