ஷா ஆலம், ஜன.30-
சட்டவிரோத முறையில் தொழிற்பேட்டை நடத்தி வரும் நில உரிமையாளர்கள் அவற்றை சட்டப்பூர்வமாக்குவதற்கான அவகாசம் இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி வரையில் மாநில அரசாங்கம் நீட்டித்துள்ளது. மாநிலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் சட்ட விதிகளுக்குப் புறம்பான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
“சட்ட விரோதத் தொழிற்சாலைகளைச் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகள் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்ற தகவலை அவர் வெளியிட்டார். சட்டவிரோதமான தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை நிறைவு பெற அதிக காலம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறும் நில உரிமையாளர்கள் மற்றும் சட்டவிரோத தொழிற்சாலை நடத்துனர் மீது சொத்துடைமை பறிமுதல் செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.


