கோலா லம்பூர், ஜனவரி 21:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா, வெளியிட்ட குரல் பதிவுகளின் உரிமையாளர்கள் இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நபர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகளை வழங்க காவல் துறையினர் அவர்களை அழைப்பார்கள் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
“உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன், அவர்கள் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான விசாரணை குறித்த உரையாடல்கள் பதிவுகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து கசிந்ததாகக் கூறி லத்தீபா வெளிப்படுத்தினார்.
#செல்லியல்


