ஷா ஆலம், டிச.31-
சிலாங்கூரில் காலைச் சிற்றுண்டி திட்டத்தில் (பிஎஸ்பி) சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் உலக சுகாதா அமைப்பு நிர்ணயித்துள்ள ஐந்து பாதுகாப்பான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்தைப் பேணுவது, சமைத்த உணவை சமைக்காத உணவில் இருந்து தனியாக வைப்பது, சரியான முறையில் சமைப்பது, உணவை பாதுகாப்பான சீதோஷ்ண நிலையில் வைப்பது மற்றும் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவையே அந்த ஐந்து வழிகாட்டல்கள் ஆகும் என்று மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் காலீட் இப்ராஹிம் கூறினார்.
இத்திட்டத்தின் இலக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளித்து மாணவர்களின் வளர்ச்சியைப் பேணுவது. இத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் நன்மையளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
“பிஎஸ்பி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு சுத்தமாகவும் பாதுக்காப்பான வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நச்சுணவு சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, உணவு தயாரிப்பு தொடங்கி விநியோகிப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்றார் அவர்.
202ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவிருக்கும் இந்த பிஎஸ்பி முதல் கட்டத் திட்டத்தை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை வரவேற்பதாக அவர் சொன்னார்.


