ஷா ஆலம், டிச.26-
சுங்கை செமினி சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட துர்நாற்றத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம், தற்போது முழு அளவில் சீரடைந்துவிட்டது.
தண்ணீர் விநியோகம் தடைப்பட்டிருந்த வேளையில் பொறுமை காத்ததோடு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பயனீட்டாளர்களுக்கும் ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.
“தண்ணீர் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறின் போது ஒத்துழைப்பு நல்கிய பயனீட்டாளர்களுக்கு நன்றி. அதேவேளையில், இக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கோருகிறோம்” என்றார்.
கடந்த சனிக்கிழமை சுங்கை செமினி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் துர்நாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலு லங்காட், புத்ராஜெயா, சிப்பாங், பெட்டாலிங் ஜெயா மற்றும் கோல லங்காட்டைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் பயனீட்டாளர்கள் பாதிப்புற்றனர்.


