ஷா ஆலம், டிச.24-
கிறுஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரையில் பிளஸ் மலேசியா நிறுவனத்தின் பராமரிப்பில் கீழ் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டச் அண்ட் கோ மதிப்பை உயர்த்தும் சாவடிகள் மூடப்பட்டிருக்கும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.
இதர பெருநாள் காலங்களைப் போலவே இந்தக் கொண்டாட்ட காலத்தில் டோல் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க அடுத்த 10 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட சாவடிகள் அடைக்கப்படுவதாக பிளஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இதன் தொடர்பில், தங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட, வாடிக்கையாளர்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட வேண்டும் குறிப்பாக டச் அண்ட் கோ அட்டைகளின் மதிப்பை முன்கூட்டிய உயர்த்துவது அவசியம் என்று அது வலியுறுத்தியது.
இதனிடையே, இ-பணப்பை மூலம் நேரடியாக கட்டணம் செலுத்தும் சேவை பிளஸ் நெடுஞ்சாலைகளில் இன்னும் தொடங்கவில்லை என்றும் அது நினைவுறுத்தியது.
வழக்கமாக நாள்தோறும் இந்த நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் 1.7 மில்லியன் வாகனங்கள் இந்த பெருநாள் காலத்தில் 2 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
எனவே, இந்தச் சமயத்தில் அனைத்து சாவடிகளிலும் நெரிசல் நிலவும் வேளையில், போதிய கட்டண மதிப்பில்லாத வாகனங்களினாலும், போக்குவரத்து நெரிசலும் மேலும் மோசமடைவதோடு வாடிக்கையாளர்களின் பயணங்களுக்கு இடையூறு விளைவுக்கும் என்று அவ்வறிக்கை கூறியது.


