ஷா ஆலம், டிச.17-
2019 சிலாங்கூர் இலக்கிய விருதளிப்பு நிகழ்ச்சியில் நாட்டின் பிரசித்தி பெற்ற ஆறு இலக்கியவாதிகள் பங்கேற்றது ஒரு வரலாற்றுப் பூர்வ பதிவாகும். இந்நிகழ்ச்சியை மீடியா சிலாங்கூர் என்றழைக்கப்படும் சிசிஎஸ்பி நிறுவனம் ஏற்பாடு செய்தது. டத்தோ ஏ.சமாட் சாயிட், டத்தோ டாக்டர் அனுவார் ரெட்சுவான், டத்தோ டாக்டர் அகமது கமால் அப்துல்லா (கெமாலா), டத்தோ டாக்டர் ஜுரினா ஹாசான், பேரசிரியர் டாக்டர் சித்தி ஜைனோன் இஸ்மாயில் மற்றும் டத்தோ பஹா ஜெயின் ஆகியோரே இந்நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்த ஆறு தேசிய இலக்கியவாதிகள் ஆவர்.
நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 2019ஆம் ஆண்டு இலக்கிய விருதளிப்பு நிகழ்ச்சியானது ஓர் அர்த்தமுள்ள வரலாற்றுப் பூர்வ நிகழ்வாகும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“இந்த நிகழ்ச்சியின் முதலாமாண்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய டாக்டர் அனுவார் ரெட்சுவான் , சிலாங்கூர்கினி டெபளாய்ட் வடிவில் வெளிவந்தாலும் எழுத்தாளர்கள் தங்கள் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பும் வழங்குவதாகக் குறிப்பிட்டது இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது” என்று அமிருடின் நினைவுகூர்ந்தார்.
“பக்கங்கள் சிறிய அளவில் இருந்தாலும் அதன் பணிகள் விரிவாக உள்ளன. எனவே, இந்த விருதளிப்பு நிகழ்ச்சியும் சம்பந்தப்பட்ட இலக்கிய பகுதிகளும் தொடர்வது அவசியமாகும்” என்றார் அவர்.


