கிள்ளான், அக்டோபர் 31:
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இம்மாநில சுற்றுலா திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் சிலாங்கூர் சுற்றுலா துறை பள்ளிகளுக்கான சுற்றுப் பயண திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அவ்வகையில் தொடக்கக் கட்டமாக இத்துறை இன்று கிள்ளான் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளிக்கு பயணம் மேற்கொண்டதாக சிலாங்கூர் சுற்றுலா தொழிற்துறை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு துறை நிர்வாகி குஸைமா ஜமாலுடின் தெரிவித்தார்.
“இம்மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய கவர்ச்சிகரமான இடங்கள் குறித்து அதிகமான பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அறியாமல் உள்ளனர்” என்று இங்குள்ள கிள்ளான் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளி, எம்ஜிஎஸ் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இந்த சுற்றுலா திட்டத்திற்கு சிலாங்கூர் கல்வி இலாகாவோடு சன்வே லேகூன்,கிட்சானியா,ஸ்கைதிரெக், மோரிப் கோல்ட்கோஸ்ட் மற்றும் ஜம்ஸ் ரீட் போன்ற மாநில சுற்றுலா நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கி வருவதாக அவர் மேலும் சொன்னார்.


