பெனாம்பாங், அக் 29-
பிரதமர் பதவி மாற்றம் ஓர் அவசியமான விவகாரம் அல்ல. மாறாக, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரதமர் பதவி மாற்றம் என்பது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏதும் தற்போது இல்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்போம். அதுவே இப்போது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாக இருக்கிறது என்று சபா பிகேஆர் மாநாட்டிற்கு பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
“அதிகார பரிமாற்றம் குறித்து துன் மகாதீரி தெரிவித்த பதில் சரியானதே. பிரதமர் பதவி குறித்து நம்பிக்கை கூட்டணி தலைவர் மன்றமே முடிவெடுக்கும்” என்றார் அவர்.
“துன் மகாதீர் தெரிவித்த பதிலில் தவறேதும் இல்லை. அவரது பதவியை துணைப் பிரதமரிடம் ( டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா) வழங்குவது. பின்னர் வான் அஜீசா அப்பதவியை என்னிடம் ஒப்படைப்பது ஆகிய அனைத்தையும் தலைவர் மன்றமே முடிவெடுக்கும்” என்று அவர் விளக்கினார்.


