செலாயாங், அக்.24-
முறையான உரிமம் இன்றி இங்குள்ள தாமான் போல்டனில் கால்வாய் மேல் கடையை நிறுவி வர்த்தகம் புரிந்த வந்த பொறுப்பற்ற தரப்பினருக்கு பேரிடியாக அமைந்தது செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை. இந்நடவடிக்கையின் போது அக்கடைகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலை 9.45 மணி முதல் பிற்பகல் 12.55 மணி வரை நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையின்போது 2007ஆம் ஆண்டு எம்பிஎஸ் சட்டத்தின் அங்காடி கடைகள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் அடங்கிய இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டது.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் பெருநிறுவன பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.
பொது இடத்தில் கூடாரம் அமைத்து இடையூறு செய்த குற்றத்திற்காக 1974ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டத்தின் கீழ் அக்கடைகள் இடித்துத் தள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.


