கோலாலம்பூர், அக்.24-
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிடு இன்று தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி வரையில், பிளஸ் நிறுவனம் அதன் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கட்டண அட்டை மதிப்பை உயர்த்தும் சாவடிகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இக்கால கட்டத்தில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் அதிகமாக இருப்பதோடு இந்த சாவடிகளில் வரிசையில் நிற்கும் வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகரித்தால், அது மேலும் நெரிசல் ஏற்படுத்தும் என்பதாலேயே விழா காலங்களில் பிளஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட சாவடிகளை மூடுகின்றது என்று ஓர் அறிக்கையில் பிளஸ் நிறுவனம் தெரிவித்தது.
வரும் அக்டோபர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் இந்நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கமான நாட்களைக் காட்டிலும் 17 விழுக்காடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் இந்நெடுஞ்சாலைகளில் 1.7 மில்லியன் வாகனங்கள் பயணிக்கின்றன என்று அது கூறியது.
இந்த நெரிசல் நேரத்தில் டச் அண்ட் கோ அட்டைகளின் மதிப்பை உயர்த்தும் சாவடிகள் செயல்பட்டால், மேலும் அதிக நெரிசலை ஏற்படுத்துவது திண்ணம் என்பதால், இந்நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று அவ்வறிக்கை விளக்கமளித்தது.


