சுபாங் ஜெயா, ஆக.30-
நகர சமுதாய நலத் திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் சுபாங் ஜெயா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) ஏற்பாடு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது ஆதரவற்ற சிறார்கள், தனித்து வாழும் தாய்மார்கள், பேறு குறைந்தோர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
“இந்நிகழ்ச்சியானது உள்ளூர் மக்கள் நலக் கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்கும் அதேவேளையில் குடியிருப்பாளர் செயற்குழுவிற்கும் (ஜேகேபி) எம்பிஎஸ்ஜேவிற்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும்” என்றார் அவர்.
எம்பிஎஸ்ஜேவின் கீழ் இயங்கும் 24 ஜேகேபிகளில் ஒவ்வொரு ஜெகேபியில் இருந்தும் ஒருவருக்கு தலா 200 வெள்ளி என மொத்தம் 15 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.


